10 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனைகள்: கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா? வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோகக் படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பறக்கும் படையினர் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரூ .10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது சம்பந்தமாக ஏற்கனவே வங்கி மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அதில் தேர்தல் நேரத்தில் வங்கியின் பண பரிவர்த்தனை யார் பெயரில் பணபரிவர்த்தனை நடைபெறுகிறது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பண பரிவர்த்தனை குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரூ 10 லட்சத்துக்கும் மேல் பண பரிவர்த்தனை செய்யும் நபர்கள் குறித்து தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.