ஈரோட்டில் மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக அரசு ,தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் ஐந்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இரண்டு தனியார் மருத்துவமனையிலும் கோவிஷில்டு தடுப்பூசி முதற்கட்டமாக தனியார், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கு போடப்பட்டது.
இரண்டாவது கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதுவரை மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதேபோன்று நகர் நல அலுவலர், உதவி ஆணையாளர்கள் என மொத்தம் 100- க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.