ஈரோட்டில் 2வது நாளாக கொரானா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் போடப்பட்டு வருகிறது. முதல் ஒரு சில நாட்கள் குறைந்த எண்ணிக்கையில் 100 பேர் வரை தடுப்பூசி போடப்படும், பின்னர் நாளாக நாளாக கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படும்.

Update: 2021-01-17 12:00 GMT

இந்தியாவில் கொரோனாவுக்கான கோவிஷீல்டு நேற்று முதல் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை உள்பட 5 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கொரோனாவுக்கான தடுப்பூசி, முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி துவங்கியது.

ஈரோடு, அரசு மருத்துவமனையில் கலெக்டர் கதிரவன் தலைமையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். ஐந்து மையங்களிலும் நாளொன்றுக்கு 100 பேர் வீதம் 500 பேருக்கு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முதல் நாளில் 122 பேர் தடுப்பூசி போட பதிவு செய்திருந்தனர். இதில் 99 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணியாளர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலுார் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய ஐந்து இடங்களில், தடுப்பூசி போடப்படுகிறது. டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என, 13,800 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான மருந்து, 13,800 டோஸ் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மருந்தும் வந்துள்ளது. இவை 86 மையங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட நபர் 30 நிமிடம் கண்காணிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடுத்த 28 நாளில் மீண்டும் ஒரு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டமாக, அரசின் பிற துறைகளில் பணி புரியும் முன் களப்பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு குறைவான உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய் போன்று கூட்டு நோய் உள்ளவர்களுக்கும், மூன்றாம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடப்படும் நபரின் மொபைல் எண்ணின், 'கோவின்' செயலியில், அவருக்கு போடப்பட்ட தடுப்பூசி விபரம், க்யூ.ஆர்., கோடு மூலமும் அனுப்பி வைக்கப்படும். நேற்று முதல் நாளில் 5 மையங்களில் 99 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு போடப்பட்டது.

இன்று 2-வது நாளாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் போடப்பட்டு வருகிறது. முதல் ஒரு சில நாட்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அதாவது 100 வரை தடுப்பூசி போடப்படும் பின்னர் நாளாக நாளாக கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News