முதலமைச்சர் ஈரோடு வருகை - முன்னேற்பாடு பணிகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

வரும் 6, 7-ந் தேதிகளில் இரண்டு நாட்கள் ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Update: 2021-01-03 11:59 GMT

அ.தி.மு.க. சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு யூகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

மேலும் நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கியும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி வரும் 6, 7-ந் தேதிகளில் இரண்டு நாட்கள் ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 6-ந் தேதி முழுவதும் புறநகர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதைத்தொடர்ந்து 7 - ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாநகர் மாவட்டத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இது சம்பந்தமாக முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், எஸ்.பி. தங்கதுரை, அ.தி.மு.க பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீசன், கேசவமூர்த்தி, ஜெயராஜ், கோவிந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News