ஈரோட்டில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்க பேரமைப்பு உண்ணாநிலைப் போராட்டம்

Erode District Traders' Associations Hunger Strike டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-03-01 06:30 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

Erode District Traders' Associations Hunger Strike

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன், பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


போராட்டத்தில், கொள்கை பரப்பு அணி மாநில இணைச்செயலாளர் சந்திரகுமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னையன், சமூக நீதிக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தமிழக வணிகம் இதழ் ஆசிரியர் நிலவன், சிஐடியு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட சிறு தொழில்கள் சங்க உடனடி முன்னாள் தலைவர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தப் போராட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப் பாதுகாப்பு தர வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை சீரழிக்க கூடாது. விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.முடிவில், வணிகர் சங்க பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

Similar News