ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் நீர்நிலைகள்

தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.;

Update: 2021-11-18 09:00 GMT

ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலம், ஒட்டகுட்டை, புளியங்கோம்பை, சதுமுகை, ஒண்டியூர், தாளவாடி, ஆசனூர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 8 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை அடுத்த ஒண்டியூர் பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது,  அந்த பகுதியில் உள்ள சண்முகம் என்பவரின் வீட்டின் மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சண்முகம், அவரது மனைவி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அங்கு சுவர் இடிந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் வீடு இடிந்து விழுந்து விடுமோ என பயந்து வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

தாளவாடி, கடம்பூர் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதனால் வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில்  புதிதாக அருவிகள் தோன்றியது. இதனால் அந்த வழியாக கார், வேன், சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் தண்ணீர் மலை பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கோபி, கொடிவேரி, பவானிசாகர், நம்பியூர், கொடுமுடி, சென்னிமலை, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்பட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக மழை பெய்தது.

நம்பியூர் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக, கஸ்பா பெருமாள் வீதியில் வள்ளியம்மாள் (48) என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அனைவரும் வெளியே சென்று விட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக,  நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஏரி , டி.என்.பாளையம் அருகே உள்ள சஞ்சீவராயன் குளம் ஆகியவை நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

Tags:    

Similar News