நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் இயங்கும்: ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.;
நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த பேரமைப்பு தலைவர் சண்முகவேல் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள (ஜிஎஸ்டி) சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் தற்போது வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்கிற புதிய சட்டத்தை நீக்கி கோரி, வரும் டிச.11ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், அகில இந்திய வணிகர் சம்மேளனம் அடுத்த வாரம் டெல்லியில் கூடி அனைத்து தரப்பு வணிகர்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்கிற அளவில் இந்தியா முழுவதும் அனைத்து மாநில வணிகர் சங்கங்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற கடையடைப்பு செய்வது என்றும் கலந்தாலோசித்து வருகின்றனர்.
ஆகையால், ஒரு மாவட்டத்தில் ஒரு ஊரில் மட்டும் கடையடைப்பு என்பது அங்குள்ள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மட்டுமே சிரமத்தை உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு வரும் நவ.29ம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.