கலவை இயந்திரத்தில் சிக்கிய பெண் பலி உள்ளிட்ட ஈரோடு மாவட்ட குற்ற செய்திகள்

காங்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

Update: 2022-12-07 11:56 GMT

கலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண் தொழிலாளி பாப்பாயி.


ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தலையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பாயி (60).கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன், மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் வீடு கட்டும் பணிக்காக நேற்று காலை பாப்பாயி மற்றும் 12 பேர் சென்றனர். காங்கிரீட் போடும் பணிக்காக மெஷினில் கலவை கலக்குவதற்காக ஜல்லிகளை கொட்டினர். பாப்பாயி ஜல்லியை மெஷினுக்குள் கொட்டியபோது எதிர்பாராத விதமாக சேலை மெஷினில் சிக்கி இழுத்துள்ளது. இதில் வேகமாக இழுத்ததால் தலை மெஷினில் சிக்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பாப்பாயி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பிரேதத்தை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கஞ்சா கடத்திய இருவர் கைது

அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் போலீசார் அங்குள்ள செக் போஸ்டில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பைக்கினை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், பாலிதீன் கவர் ஒன்றில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பைக்கில் வந்த சேலம் மாவட்டம், காட்டூர் அரியாம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவரது மகன் தனசேகரன் (24), வேலாங்காடு அம்மாசை மகன் நந்தகுமார் (27) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களை  வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியில் நம்பியூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையில் நம்பியூர் ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி (வயது 60) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.70 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்தில் வாலிபர் பலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கரட்டூர் நாடார் காலனியை சேர்ந்தவர் சௌந்தர் (25). இவர் சம்பவத்தன்று அத்தாணியில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, நாடார்காலனி - கரட்டூர் சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அங்குள்ள மின்மோட்டார் அறையின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சௌந்தரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சௌந்தர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News