ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் உள்பட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-11-16 11:30 GMT

ரேஷன் அரிசி கடத்தலில் கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் அரக்கன் கோட்டை அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 40 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி 32 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர் பவானி மேற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்டன் (30) என்பதும் பவானி சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு ரேசன் அரிசி மூட்டைகளை கொண்டு செல்வதாகவும் தெரியவந்தது. ரேசன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் பிடிபட்ட மணிகண்டனை ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் பதுக்கிய ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு புதுமை காலனி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, ஈரோடு தெற்கு போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் புதுமை காலனியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது, ஒரு வீட்டில் 10 கிராம் அளவு கொண்ட 164 கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் ஒன்னே கால் கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜா (எ) ஷேக் தாவூத் (28) என்பவரை கைது செய்தனர்.

பஸ்சில் கர்நாடக மது கடத்தியவர் கைது 

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு வரும் கர்நாடக மாநில அரசு பஸ்சில் மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக ஆசனூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆசனூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கர்நாடக மாநில அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பஸ்சில் கர்நாடக மாநில மதுபானங்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கோவை மாவட்டம், சோமனூர், செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்கொலை

ஓடிசா மாநிலம், சின்டோல் பகுதியை சேர்ந்தவர் குலமணிமாலிக், இவரது மகன் ரஞ்சன் மாலிக்(27). இவர் சென்னிமலை அடுத்துள்ள பனியம்பள்ளி பகுதியில் தங்கி பெருந்துறை சிப்காட் டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி பனியம்பள்ளி சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் ரஞ்சன் மாலிக் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News