ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்: கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி, செயின் பறிப்பு

ஈரோட்டில் பட்டதாரி பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-11-09 15:15 GMT

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த கோகுலபிரியா

ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள் 

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி:-  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி. இவரது மகள் கோகுலபிரியா (வயது 25).  இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்காக சென்றவர் அருகில் இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்துவிட்டார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காததால், இது குறித்து அந்தியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சுமார் அரை மணி நேர தேடலுக்குப் பின்பு கோகுல பிரியாவின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் உடலை வெள்ளித்திருப்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கோகுலபிரியாவின் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

அத்தாணியில் கார் ஒர்க் ஷாப்பில் சிசிடிவி காட்சிகள் திருட்டு:-  ஈரோடு மாவட்டம் அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் மாட்டு கருப்புச்சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவி மூர்த்தி (வயது 27). இவர் செம்புளிச்சாம்பாளையம் பிரிவில் கார் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து சஞ்சீவி மூர்த்தி வீடு திரும்பினார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் ஒர்க்‌ஷாப்பை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கண்காணிப்பு கேமிராவின் காட்சிகள் காணாமல் போயிருந்ததை கண்டு சஞ்சீவி மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசில் சஞ்சீவி மூர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.


சென்னிமலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு:- ஈரோடு பஸ் ஸ்டாண்ட் கோட்டை முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி அமுதாதேவி (38), இவரும், இவருடைய சகோதரி ஜெயலட்சுமி என்பவரும் நேற்று சென்னிமலை முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர். இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள சித்தர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் படிக்கட்டுகள் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த மர்ம ஆசாமி ஒருவர் அமுதாதேவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சென்னிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கேரளா மாநில லாட்டரி விற்றவர் கைது‌:- சத்தியமங்கலம் காவல்துறையினர் சத்தியமங்கலம் மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்தவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் வரதம்பாளையத்தை சேர்ந்த அண்ணாச்சி என்கிற சத்தீயசீலன் (72) என்பதும், கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 192 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

லாட்டரி விற்பனையில் கைது செய்யப்பட்ட அண்ணாச்சி என்கிற சத்தீயசீலன்

மது விற்றவர் கைது‌:- தாளவாடி அடுத்துள்ள திகினாரை அம்பேத்கர் வீதியில் உள்ள கோவிந்தராஜ் (வயது 44) என்பவரை வீட் டில் கர்நாடக மாநில மது பாட்டில்களை விற்பனை செய்வதாக தாளவாடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்திய போது அட்டை பெட்டியில் ஏராளமான கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜை கைது செய்த காவல்துறையினர் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஏணியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி:-  ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள வடக்கு நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கட்டிட பணிகளை பார்வையிடுவதற்காக ஏணியில் ஏறிய போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்ட நிலையில், சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர்  விசாரித்து  வருகின்றனர்.

Tags:    

Similar News