ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள் (18.10.2022)
அந்தியூர் அருகே வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை:- அந்தியூர் அருகே உள்ள முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(50). இவர் லாரி வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தின இரவு சின்னச்சாமி அவர் வீட்டின் முன்பு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கதவு திறக்கப்பட்ட நிலையில் வீட்டிற்குள் அவரது மகன்கள், மனைவி படுத்து உறங்கிக் கொண்டுருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ60 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க சங்கிலி, வீட்டின் முன் டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் போலீசார் விரைந்தனர். அங்கு கை ரேகைகளையும் திருட வந்த நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர்கள் மீது கிரேன் ஏறி இறங்கியதில் ஓய்வு வன ஊழியர் மனைவியுடன் பலி:- ஈரோட்டில் இன்று காலை துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற வன ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது கிரேன் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.ஈரோடு மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (75), ஓய்வு பெற்ற வன ஊழியர். இவரது மனைவி பாப்பாத்தி (65), கணவன், மனைவி இருவரும் இன்று காலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஈரோடு செட்டிபாளையம் பிரிவு அருகே சென்ற போது, திடீரென நிலை தடுமாறிசுப்பிரமணி, பாப்பாத்தி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே சாலையில் விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி,பாப்பாத்தி மீது ஏறி இறங்கியது.இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த ஈரோடு தாலூகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.