ஈரோடு மாவட்டத்தில் கொடி நாள் நிதியாக ரூ.1.87 கோடி வசூல்
ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ.1.87 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ.1.87 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணியினை துவக்கி வைத்து, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை சார்ந்த 10 நபர்களுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, ஆளுநரின் கொடிநாள் செய்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கொடிநாள் செய்தி வாசிக்கப்பட்டது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7ம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணி துவக்கி வைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை துவக்கி வைக்கப்பட்டது.
நாட்டின் பரந்து விரிந்த எல்லைகளை பாதுகாத்து வருவதோடு, தீவிரவாதிகளின் பயங்கரவாதத்திலிருந்து தங்களுடைய இன்னுயிரை ஈந்து நாட்டையும், நாட்டு மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து அரும்பணியாற்றி வருபவர்கள் நமது முப்படைவீரர்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாளன்று நாடு முழுவதும் முப்படையினரின் கொடிநாள் விழா கொண்டாடப்படுகிறது.
நமது முப்படைவீரர்களின் ஒப்பற்ற நிகரில்லா தியாகங்களுக்கும், கடமைகளுக்கும் நாம் காட்டுகின்ற நன்றி உணர்வின் பொருட்டாக கொடிநாள் கொண்டாடப்படுகிறது. நமது தாய் திருநாட்டினை அந்நியர்களிடமிருந்தும், இயற்கை சீற்றங்களின்போதும் கலங்காது நின்று கடமையாற்றி மக்களை காத்திடும் மாபெரும் தியாகச் செம்மல்களான நமது படைவீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதிவசூல் இலக்காக ரூ.1.64 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.1.87 கோடி (113.77%) நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு நிதிவசூல் இலக்காக ரூ.5.60 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.6.59 லட்சம் (117.79%) நிதி வசூல் செய்யப்பட்டு அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு 117.79% சதவீதம் வசூல் செய்து நம் ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதி மற்றும் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. மேலும், படைவீரர் கொடிநாள் 2023 நிதி வசூலினை அதிக அளவில் வசூல் செய்த அனைத்து துறை மாவட்ட அலுவலர்களுக்கும் மற்றும் படைவீரர் கொடிநாள் நிதி வசூலுக்கு நிதி வழங்கிய பொதுமக்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, கடந்த ஆண்டை போல, இந்த வருடமும் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, முப்படையினரின் தன்னலமற்ற சேவையினை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டும் வகையில் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மேலும், 4 நபர்களுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகையும், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரருக்கு கருணைத் தொகை ரூ.30 ஆயிரம் வைப்பு நிதியும் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து ஒரு முன்னாள் படைவீரருக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுக்கடன் மானியமும், 4 நபர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 824 மதிப்பீட்டில் கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் வீட்டுவரிச்சலுகையும் என மொத்தம் 10 நபர்களுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, சமூக ஆர்வலர் லோகநாதன் கொடிநாள் வசூல் உண்டியலினை வழங்கினார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.
இந்நிகழ்வின் போது, முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் / உதவி இயக்குநர் (முகூபொ) புஷ்பலதா, பிரிகேடியர். லோகநாதன் (ஓய்வு), லெப் கர்னல் நாகராஜன் (ஓய்வு), நல அமைப்பாளர் சாமுவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.