அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உப்பு சர்க்கரை கரைசல் இலவசமாக வழங்கல்: ஈரோடு ஆட்சியா் தகவல்

அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் உப்பு சர்க்கரை கரைசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-08 00:40 GMT

அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் உப்பு சர்க்கரை கரைசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்ப அலை வீசுகிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற சூழல் வெப்பநிலை அதிகமாகும்போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.

அதிக வெப்பத்தினால் அதிக தாகம், தலைசுற்றல், கடுமையான தலைவலி, தசை பிடிப்பு, உடல்சோர்வு, மயக்கம், வலிப்பு போன்ற பாதிப்பு ஏற்படும். பச்சிளம் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணைநோய் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடை வெப்பத்தாக்க பாதிப்பை தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடைபிடித்து செல்ல வேண்டும். வெயிலின் பாதிப்பு காரணமாக உடலில் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை பருகலாம்.

பருவகால பழங்களான தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரி, நுங்கு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். வெப்பத்தாக்க அதிர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக அந்த நபரை குளிர்ந்த காற்றோட்டமான பகுதியில் படுக்க வைத்து குடிப்பதற்கு பழச்சாறு அல்லது உப்பு சர்க்கரை கரைசலை கொடுக்க வேண்டும்.

மேலும், கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு டாக்டரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

எனவே, பொதுமக்கள் கோடை வெயிலின் வெப்பத்தாக்க பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பொது மக்கள் பெற்றுக்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News