தாளவாடி வட்டத்தில் இரண்டாவது நாளாக ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், தாளவாடி வட்டத்தில் 2-ஆவது நாளாக கள ஆய்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 27) ஈடுபட்டார்.;

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், தாளவாடி வட்டத்தில் 2-ஆவது நாளாக கள ஆய்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 27) ஈடுபட்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்தில் தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், குளிர்பதனக் கிடங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம், மாதிரி பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (மார்ச் 26) ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (மார்ச் 27) தாளவாடி வட்டம், ஓங்கல்வாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் வகைகள் மற்றும் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ஓங்கல்வாடி பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரிவிகித அளவில் கலந்துள்ளதா என கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), ரமேஷ் (சத்துணவு), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.