தாளவாடி தலமலையில் மனுநீதி நாள் முகாம்: 115 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஈரோடு ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் தலமலை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 115 பேருக்கு ரூ.71.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.;

Update: 2024-12-11 12:00 GMT

தாளவாடி தலமலை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.

தாளவாடி வட்டம் தலமலை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 115 பேருக்கு ரூ.71.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு தாளவாடி வட்டம் தலமலை கிராமத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய வளாகத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (டிச.11) நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, 115 பயனாளிகளுக்கு ரூ.71.18 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது, தலைமலை ஊராட்சிக்கு உட்பட்ட ராமரணை, காளித்திம்பம் மாவனத்தம் போன்ற குக்கிராமங்களில் தார்சாலை அமைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தற்பொழுது வனத்துறையின் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.


பெஜலட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையின் மூலம் போடப்பட்ட, பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைப்பதற்கும் தற்பொழுது அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த வகையில், பெஜலட்டியில் இருந்து இட்டரை வரை தடசலட்டி வழியாக சுமார் 4.00 கிலோ மீட்டர் நீளமுள்ள பழுதடைந்த சாலையினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். பெஜலட்டி, இட்டரை ஆகிய கிராமங்களை இணைக்கக்கூடிய சாலை விரைவில் அமைக்கப்படும்.

அதேபோல தலமலை ஊராட்சியில் தடையில்லா மின்சாரத்திற்கு நிரந்தர தீர்வாக துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இடம் தேர்வு செய்து, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் துணை மின் நிலையம் அமையும் பொழுது, தடையில்லா மின்சாரம், குடிநீர் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும். ராமரணை பகுதியில் மின்கம்பங்கள் அமைப்பதற்கு வனத்துறை மற்றும் மின்சார வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும் பல்வேறு கிராமங்களில் தனிநபர் பட்டா, சமூக பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் கிராமங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. எனவே அந்தந்த கிராமங்களுக்கு தேவையான சாலை, தெரு விளக்குகள், ஜெனரேட்டர் வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசிற்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும். அதேபோல ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இப்பகுதியில் பிஎஸ்என்எல் மூலம் கைபேசி டவர் அமைப்பதற்கு கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


வன உரிமை சட்டத்தின் கீழ் 50 உரிமை பட்டாக்கள் வழங்கப்பட்ட குக்கிராமங்களுக்கு நிரந்தர தீர்வாக குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு பல்வேறு திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்திற்கும் குறிப்பாக தலமலை ஊராட்சிக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ்,கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பாஸ்கர், துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, தாட்கோ மேலாளர் அர்ஜூன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) வெள்ளியங்கிரி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், தாளவாடி வட்டாட்சியர் சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News