கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியா் ஆய்வு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-03-04 11:40 GMT

அஞ்சூர் ஊராட்சியில் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற வடிவுள்ள மங்களம் முதல் வள்ளிபுரம் வழியாக வேப்பங்காட்டு பாறை வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, வடுகபட்டி பேரூராட்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்து, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, அஞ்சூர் ஊராட்சியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் வீதம் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.


மேலும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.41.35 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அஞ்சூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் வடிவுள்ளமங்களம் ஏடி காலனி முதல் வள்ளிபுரம் வழி வேப்பங்காட்டுபாறை வரை சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சாலையின் நீளம், அகலம் ஆகியவற்றினை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, கொந்தளம் ஊராட்சியில் ஊரக குடியிருப்புகள் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் சீரமைக்கும் பணிகள் மற்றும் அதே பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.41.58 லட்சம் மதிப்பீட்டில் கொந்தளம் சாலை முதல் லட்சுமிபுரம் வரை சாலை பலப்படுத்தும் பணி மற்றும் கொடுமுடியில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பயணியர் மாளிகை கட்டிடம் பலப்படுத்தி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, கொடுமுடி பேரூராட்சியில் செயல்படும் முழுநேர கிளை நூலகம், மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவைற்றை பார்வையிட்டு, அங்கு போட்டி தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.


தொடர்ந்து, கொடுமுடி பேரூராட்சி, கணபதிபாளையத்தில் அமைந்துள்ள வள மீட்பு பூங்காவில் குவிந்துள்ள பழைய கழிவுகளை உரத்திற்கு சலித்தது போக மீதமுள்ள கழிவுகள் மற்றும் தினசரி சேகரமாகும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த இயலாத கழிவுகள் எரிக்கும் இயந்திரம் தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்ததை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கொடுமுடி வடக்கு வீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு அம்ரூத் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அழுத்தத்தினை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சிவகிரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதாபானு, மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ், கொடுமுடி வட்டாட்சியர் பாலமுருகாயி, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, கவிதா, கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News