ரூ.16,500 கோடி விவசாய பயிர் கடன் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

ரூ.16,500 கோடி விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈரோட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

Update: 2024-11-21 12:30 GMT

திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கிய போது எடுத்த படம்.

ரூ.16,500 கோடி விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈரோட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், மங்களம் பதனிடும் அலகு மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு, திண்டல்மலை நகர கூட்டுறவு சங்கத்தில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.25.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு  கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (நவ.21) வழங்கினார்.


பின்னர், இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை எண்ணெய் விவசாயிகள் அதிகபடியாக இருக்கின்ற காரணத்தால், இங்கு விளையக்கூடிய தேங்காய்களாகவும், கொப்பரைகளாக மாற்றியும் தங்குடைய வாழ்வாதாதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விவசாய பெருங்குடி மக்கள் வரவு செலவு செய்கின்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டறவு சங்கமானது நல்லமுறையில் செயல்பட்டு, விவசாயிகள் பாராட்டுகின்ற வகையில் இயங்கி வருகின்றது. கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர்ப்புற கூட்டுறவு சங்கங்களாக தரம் உயர்த்தப்பட்டு, கிராம கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.


மேலும், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு ஆகியற்றினை முன்னேற்றுவதே கூட்டுறவு சங்கங்களின் முக்கிய நோக்கமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரையின்படி, விவசாயிகளுக்கான பயிர் கடன் ரூ.12 ஆயிரம் கோடியை கடந்து தற்போது ரூ.16,500 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு வங்கி மூலம் பண பரிவர்த்தனை இந்தாண்டு ஒரு லட்சம் கோடி  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் பணி 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மேலும், கிராம அளவில் மொபைல் ஏ.டி.எம் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளை உயர்த்த புதுமையான திட்டங்கள் மூலம் புதுமைப்படுத்த அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.


முன்னதாக, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கொப்பரை ஏல பணிகள், பதனிடும் அலகுகள், எண்ணெய் அரவை ஆலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், மங்களம் பதனிடும் அலகின் செயல்பாடுகள், அங்கு தயாரிக்கப்படும் மஞ்சள், ராகி மாவு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, மற்றும் பேக்கிங் ஆகியவற்றினை பார்வையிட்டார். மேலும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வளர்ச்சி மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தட்டாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விவசாயம் இயந்திரமாக்கலின் துணைப்பணி திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட ரூ.8 லட்சம் மானியத்தில் ரூ.15.99 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர், சுழற்கழப்பை, ஏர் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை காஞ்சிக்கோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பயன்பாட்டிற்கு வழங்கும் பொருட்டு, அதன் சாவியினை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின் போது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சென்னை சுப்பையன், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் (ஈரோடு மண்டலம்), கூடுதல் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் செல்வக்குமரன், துணைப்பதிவாளர் தகாலிதா பானு, கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி உட்பட கூட்டுறவு சங்கங்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News