மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கலெக்டர், எஸ்பி அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல்
மறைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த டிச.14ம் தேதி உயிரிழந்தார்.
பின்னர், டிச.15ம் தேதி மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு நேற்று நேரில் சென்றனர். அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.