சத்தியமங்கலத்தில் பொதுமக்களிடம் இருந்து 55 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியா்!

சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடம் இருந்து 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.;

Update: 2025/05/22 12:10 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (மே.21) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைச்சார்ந்த முதன்மை அலுவலர்கள் சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகள், துறைச் சார்ந்த அலுவலகங்கள், பள்ளிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம், பொது நூலகங்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் அரசின் திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பாக  மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் விவாதித்தார்.

தொடர்ந்து, ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும், பள்ளிகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும், மாணவர்கள் கற்றல் திறனை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 55 மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பாஸ்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), லோகநாதன் (வேளாண்மை), மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) ராதிகா உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News