சித்தோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய புதிய கட்டிடத்தினை திறந்து வைத்த ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திறந்து வைத்தார்.
சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (டிச.30) திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கனரா வங்கி சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இலவச பயிற்சி, உணவு, சீருடை மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியினை கடந்த 14 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கிராமப்புற அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கனரா வங்கியால் நடத்தப்படும் இப்பயிற்சி நிலையத்தில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், சுயமாக தொழில் செய்து முன்னேறவும், வேலை வாய்ப்பினை பெறவும் தேவைக்கேற்ப தொழில் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுவதோடு, பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி பெற்றவர்கள் சுயதொழில் தொடங்கவும் அல்லது வேலை வாய்ப்பினை பெறவும் தகுந்த வல்லுநர்களால் வழிகாட்டுதலும் தரப்படுகின்றன. பயிற்சி முடித்த பின்னர் ஒவ்வொருவருக்கும் பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் மத்திய கிராமப்புற அமைச்சகத்தின் சார்பாக திறன் மேம்பாட்டிற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் அழகுக்குலை பயிற்சி, பெண்களுக்கான தையல் கலை, கணினி டேலி பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல், துரித உணவு தயாரித்தல், காளான் வளர்ப்பு, கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட 21 வகையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சி வகுப்பு கட்டிடத்தில் 2 வகுப்பறைகள், 2 தொழிற் கூடம், கணினி ஆய்வகம், நுாலகம், உணவுக்கூடம், 2 தங்கும் விடுதி வசதி (ஆண் மற்றும் பெண் தனித்தனி), 2 பயிற்சி ஆசிரியர்கள் தங்கும் அறை, அலுவலகம், நிதிசார் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி துணை பொது மேலாளர் மு.செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.ராஜ்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய மாநில இயக்குநர் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) எஸ்.அன்புக்கரசு, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.