தமிழக ஆளுநரின் உருவப்படத்தை கிழித்து போராட்டம்: தமிழ் புலிகள் கட்சியினர் கைது
தமிழக ஆளுநரின் உருவப்படத்தை கிழித்து ஈரோட்டில் போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வந்துள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி விட்டார்.
எனவே தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ரவியின் செயலை கண்டித்தும், அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஆளுநர் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பன்னீர்செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சாக்குபை, தண்ணீர் குடம் என தயாராக வைத்திருந்தனர். இதை அறிந்த தமிழ்புலிகள் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டுவந்திருந்த ஆளுநரின் உருவப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியேறு வெளியேறு தமிழக ஆளுநரே வெளியேறு, திரும்பப் பெறு திரும்பப்பெறு ஆளுநரை திரும்ப பெறு என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் இருந்த போலீசார் விரைந்து சென்று சிந்தனை செல்வன் உட்பட 19 நிர்வாகிகளை கைது செய்து வேனில் ஏற்றி அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.