அரசு குழந்தை காப்பகங்களில் சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு
ஈரோட்டில் உள்ள அரசு குழந்தை காப்பகங்களில் சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி ஐஏஎஸ் இன்று திடீர் ஆய்வு செய்தார்.;
ஈரோட்டில் உள்ள கொல்லுக்காட்டு மேடு அரசு குழந்தைகள் காப்பகம், ஆர்.என்.புதூரில் உள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் ஆகிய காப்பகங்களில் காவலர்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், அரசு குழந்தைகள் காப்பகங்களுக்கு ஒதுக்கும் நிதியை அதிகாரிகள் கையாடல் செய்வதால் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை, போதிய கழிப்பிட வசதிகள் இல்லை எனவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் என பதிவு செய்ய டாக்குமெண்ட் சார்ஜ், போக்குவரத்து செலவு என்ற பெயரில் குழந்தைகள் நல அலுவலர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் எனவும் தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்ததால், ஈரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமூக பாதுகாப்புத் துறை இயக்குனர் வளர்மதி ஐஏஎஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், காப்பகத்தில் உள்ள தங்கும் அறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், காப்பகத்தில் உள்ள ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் மூலம் ஒழுங்கீனமாக செயல்பட்ட காப்பக ஊழியர்கள் மீதும், அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.