ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேரடியாக பங்கேற்று ஆர்வமுடன் விளையாடினர்.;
கொரானா பாதிப்பிற்கு பிறகு தமிழகத்திலேயே முதன்முறையாக ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேரடியாக பங்கேற்று ஆர்வமுடன் விளையாடினர்.
ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி ஈரோடு கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட சதுரங்க சர்கிள் செயலாளர் ரமேஷ் தலைமையில், கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட தாளாளர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் 9 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேரடியாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ஈரோடு தாலுகா செஸ் அசோசியேசன் செயலாளர் கராத்தே நாவலன் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.