சோப்பு கம்பெனி உரிமையாளர் ஏலச்சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் மோசடி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்த சோப்பு கம்பெனி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிப்பு.
ஈரோடு அசோகபுரம் பகுதியில் வள்ளல் பாபு என்பவர் 5 ஸ்டார் என்ற பெயரில் சோப்பு கம்பெனி நடத்தி வந்துள்ளார். அங்கு தினசரி வசூல் அடிப்படையில் 3 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். இந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் அசோகபுரம் மற்றும் கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை கட்ட தொடங்கியுள்ளனர்.
ஆரம்ப கட்டத்தில் முறையாக நடைபெற்ற ஏலச்சீட்டு, நாளடைவில் ஏலம் எடுத்த நபர்களுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அனைவரிமுடம் பணம் வசூல் செய்த ஏலச்சீட்டு நிறுவனர் வள்ளல் பாபு இரவோடு இரவாக தலைமறைவாகியுள்ளார். அவர் நடத்திய சோப்பு கம்பனியையும் காலி செய்து விட்டார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில் , ஏலச்சீட்டு நிறுவனத்தில் சுமார் 10 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நிறுவனர் வள்ளல் பாபுவை கைது செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.