மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் மனு

மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update: 2021-12-20 10:30 GMT

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சிறு குறு தொழில் கூட்டமைப்பினர்.

ஜவுளி தொழில் பிரிண்டிங் உணவுப்பொருள் பிளாஸ்டிக் என்ஜினீயரிங் தொழிலில் மூலப் பொருள்கள் விலை 70 முதல் 87 சதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளன. இதை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட சிறுகுறு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கங்களின் தலைவர் திருமூர்த்தி தலைமையில் 48 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிடம் மனு அளித்தனர் .

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மூலப் பொருள்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதமும் ஏற்றுமதியில் 40 சதவீதம், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, 45 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை அவை உருவாக்குகின்றன.

தற்போதைய நிலையில் பல சிறு குறு தொழில்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இதனால் வங்கிகள் தங்கள் கடன் தொகையை திருப்பி பெற கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சம் உள்ளது. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு மூலப் பொருட்களின் விலை உயர்வை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் சிட்கோ என் எஸ் ஐ சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக நேரடி கொள்முதல் செய்து குறைந்த விலையில் மூலப்பொருட்களை சிறு குறு தொழில்கள் வழங்க வேண்டும். ஏற்கனவே பலர் வேலை இழந்தனர்.தற்போது நிலையில் கோடிக்கணக்கானோர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பிரகாஷ், ஸ்ரீதர், கந்தசாமி, பழனிவேல், சரவணபாபு, ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் சிவானந்தம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News