பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் காக்கிச்சட்டை முருகேசன் கைது
ஈரோட்டில் பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் காக்கிச்சட்டை முருகேசன் வாகன சோதனையில் சிக்கினான்.;
ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் அந்தப் பகுதி வழியாக வந்தார். போலீசை பார்த்ததும் அந்த வாலிபர் வண்டியை நிறுத்தினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணை அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கபிலர்மலை பகுதியை சேர்ந்த காக்கிச்சட்டை என்கிற முருகேசன் ( 35) என்பதும், மோட்டார் சைக்கிள் கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
ஈரோட்டில் மட்டும் 25 மோட்டார் சைக்கிளை முருகேசன் திருடியுள்ளார், அவற்றை பறிமுதல் செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடியதும் தெரிய வருகிறது என்றனர்.