ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொள்ள வருபவர்களை தடுக்க போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த இருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கும் நிலையில், தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் போலீசார் நுழைவுவாயில் நின்று பொதுமக்களின் உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுமதித்தனர்.இருப்பினும் அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு தீயணைக்கும் கருவிகள், போர்வைகள், தண்ணீர், மணல் போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். தீ தடுப்பு கருவிகளை திங்கள் கிழமைகள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.