ஈரோட்டில் 285 தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி

ஈரோட்டில் 285 தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டடுள்ளதாகவும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தகவல்.

Update: 2021-10-30 13:30 GMT

பட்டாசு கடை.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அரசு பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளதால் ஏராளமான வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பட்டாசு கடைகளை அமைத்து வருகின்றனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பவர்களிடம் இருந்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் பெறப்பட்டது.

இதில் மாவட்டம் முழுவதும் 288 பேர் பட்டாசு கடைகளை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்திட மாவட்ட எஸ்.பி., மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் அமைக்க விண்ணப்பித்த இடத்தில் வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறையினர் தனித்தனியாக ஆய்வு செய்தனர். இதில், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கேட்டு வந்த 288 விண்ணப்பங்களில், 285 கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 3 விண்ணப்பங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் பட்டாசு கடைகள் அமைக்க குறைந்தளவே விண்ணப்பங்கள் வந்தது. அதில் கடந்த ஆண்டு 110 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினோம். நடப்பாண்டு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க வந்த விண்ணப்பங்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து, 285 கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளோம். 3 விண்ணங்களை நிராகரித்துள்ளோம். தற்காலிக பட்டாசு கடைகளில் மணல் நிரம்பிய வாலி, 300 லிட்டர் தண்ணீர் நிரப்பிய டிரம், புகைபிடிக்க கூடாது என்ற எச்சரிக்கையை வைத்திருக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுடன், பட்டாசினை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும், எந்த இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்க கூடாது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கியுள்ளோம். இதுவரை 100 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News