வாலிபால் மைதானத்தை திறக்க வலியுறுத்தி பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா
வாலிபால் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தை திறக்க வலியுறுத்தி பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா.;
பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெற்றோர்கள்.
ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மாலை நேரத்தில் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வாலிபால் பயிற்சியினை தன்னார்வலர் ஒருவர் கட்டணம் ஏதுமின்றி பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல மாணவர்கள் புகழ்பெற்ற கல்லூரிகளில் உயர்கல்வி விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்வி பயில்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மைதானம் மூடப்பட்ட நிலையில் இன்றளவும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் விளையாட்டு மைதானத்தை திறக்க மறுப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக மைதானத்தை திறந்து விளையாட்டு பயிற்சி பெற அனுமதிக்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வாசலில் திடீர் என அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்த்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதான படுத்தியதை தொடர்ந்து தர்ணாவை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.