ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு: பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு

இரவு நேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-07 00:15 GMT

இரவு நேர ஊரடங்கின் போது, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலை கட்டுப்பாடுத்தும் விதமாக,  தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, நேற்று இரவு முதல்,  வார நாட்களில் இரவு 10 மணி முதல்,   காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நேற்று இரவில் இருந்து, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கையொட்டி அனுமதி மறுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 850 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பேரிகார்டுகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதியளித்தனர். அதேசமயம் தேவையின்றி வாகனஙகளில் சுற்றி திரிந்த நபர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்,  அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News