அந்தியூரிலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ
அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து, சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலைப் பகுதிக்கும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கும் புதிய பேருந்து சேவையை துவக்க வேண்டும் என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரிடம் மனுக்களை வழங்கி வேண்டுகோள் விடுத்தார். இதற்கு செவி மடுத்த முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர், புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தார்.
இதனையடுத்து, இன்று அந்தியூர் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வில், அந்தியூரில் இருந்து ஈரோடு, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கும், அத்தாணி , சத்தி வழியாக தாளவாடிக்கும் பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார். அப்போது, தொமுச மண்டல பொருளாளர் ரங்கநாதன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.