கால்நடை கலப்பு தீவன உற்பத்தி ஆலையில் அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு

கால்நடை கலப்பு தீவன உற்பத்தி ஆலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-01-08 11:00 GMT

கால்நடை கலப்பு தீவன உற்பத்தி ஆலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் நிறுவனம் மற்றும் ஆவின் நிறுவனத்தின் கால்நடை கலப்பு தீவன உற்பத்தி ஆலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஈரோடு காசிபாளையம் கால்நடை தீவன தயாரிப்பு ஆலையில் தற்போது தினமும், 150 டன் கால்நடை கலப்பு தீவனம் உற்பத்தியாகிறது.

இதனை, 300 டன் உற்பத்திக்கான ஆலையாக மாற்றப்பட்டு வரும், 19 ல் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பயன்பாட்டுக்கு திறக்கிறார். கூடுதல் இயந்திர செயல்பாடுகளை ஆய்வு செய்தபின், அமைச்சர் நாசர், நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டால் நஷ்டத்தில் ஆவின் நிறுவனம் இயங்கியது. இதை அறிந்தும், விற்பனை விலை லிட்டருக்கு, 3 ரூபாயை முதல்வர் குறைத்ததால் ஆண்டுக்கு, 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆவினை மீட்டெடுக்க, கூடுதல் பால் கொள்முதல், பால் உப பொருள் விற்பனை மூலம் பல முயற்சி மேற்கொள்கிறோம்.

முன்பு தினமும், 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தனர். தற்போது, 41 லட்சம் லிட்டராக்கி உள்ளோம். தினமும், 26 லட்சம் லிட்டர் பால் விற்பனையை, 28 லட்சம் லிட்டராக்கி உள்ளோம். பால், தயிர், வெண்ணெய், நெய், லெஸி, குளோப்ஜாமுன், பால்பேடா, பிஸ்கெட் என 140 வகையான உப பொருட்களாக்கி விற்கிறோம். முன்பு, 124 கோடி ரூபாய்க்கு திருக்கோவில்களுக்கு பால், நெய் போன்றவை வழங்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் அதனை நிறுத்தியதால், மீண்டும் துவங்குகிறோம். நெய்யை, ஷாம்பு போல சிறிய சேஷாக்களில் வழங்க உள்ளோம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு முன்பு பால், நெய் போன்றவை ஆவின் மூலம் வழங்கியதை கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் வழங்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

கடந்தாண்டு தீபாவளியின்போது, 35 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்தனர். இந்தாண்டு கடும் மழைக்கு இடையே, 150 டன், 53 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அத்துடன் பால் பாக்கியை குறைக்கும்படி தீபாவளியின்போது, 220 கோடி ரூபாய் கறவையாளர்களுக்கு வழங்கி, தற்போது வரை அவ்வப்போது பால் பணம் வழங்கி வருகிறோம். வேலை வாங்கித்தருவதாக கூறி ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரில் ராஜேந்திரபாலாஜி கைதாகி உள்ளார்.

மேலும் பல புகார்கள் அவர் மீது உள்ளது. ஆவின் நிர்வாக ரீதியாகவும் அவர் செய்த முறைகேடு குறித்த ஆய்வு முடிந்ததும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு ஆவின் போல, பல ஆவின் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.

அவை விரைவில் லாபத்துக்கு கொண்டு வரப்படும். பால் பொருள் ஏற்றுமதி, ராணுவத்துக்கு சப்ளை நிறுத்தப்பட்டதை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கால்நடை தீவனம் ஒரு கிலோ, 2 ரூபாய் மானியத்தில் முன்பு வழங்கப்பட்டது. தற்போது நிறுத்தி உள்ளனர். அதனை மீண்டும் வழங்க முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் திமுக எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், கால்நடை தீவன தொழிற்சாலை துணை பொது மேலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்

Tags:    

Similar News