ஈரோடு மாநகரில் 2-வது நாளாக பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
ஈரோடு மாநகரில் 2-வது நாளாக பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வயது பேதமின்றி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிக்காமல் பசுமை பட்டாசு வெடிக்க வேண்டும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதையெல்லாம் மீறி மக்கள் வழக்கம் போல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதையடுத்து தெருக்கள் வீதிகளில் பட்டாசு கழிவுகள் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
ஈரோடு மாநகர் பகுதியில் 60 வார்டுகளிலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களிலும் பட்டாசு கழிவுகள் கிடக்கின்றன. மேலும் அதன் தொடர்பான குப்பைகளும் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் இதற்காகவே 100 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்று முதல் பட்டாசு கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி பகுதிகள் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக குப்பைகள் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 3 டன் குப்பைகள் இன்று அகற்றப்பட்டு விடும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தடவை பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி சவாலாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். காரணம் மாணவர் தொகுதி முழுவதும் வீதிகளில் முக்கிய சாலைகளில் பட்டாசு கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை அந்தந்த பகுதிக்கு பிரிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.