சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்

ஈரோட்டில் சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்ததால் உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்;

Update: 2023-09-23 05:11 GMT

சப்பாத்தியில் காணப்பட்ட பூச்சி

ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். துரித உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசவத்திற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவானந்தம், மருத்துவமனையில்  இருக்கும் தனது மனைவி மற்றும் தாயாருக்கு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சப்பாத்தி பார்சல் வாங்கி கொண்டு சென்றார். மருத்துவமனை சென்ற அவர்  பார்சலை திறந்தபோது சப்பாத்தியில் இருந்து பூச்சி ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர், உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஓட்டல் நிர்வாகத்தினர் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். எனினும் சமாதானமடையாத ஜீவானந்தம் இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலும் சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்து சென்றதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட உணவகத்தில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உணவகத்தின்  சமையல் அறை சரிவர பராமரிக்கப்படாமலும், போதுமான சுகாதாரம் இல்லாமலும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உணவகத்தை மூடச்சொல்லி உத்தரவிட்ட அதிகாரிகள், குறைகளை நிவர்த்தி செய்த பிறகு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னர் உணவகத்தை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News