நமக்கு நாமே திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு: ஈரோடு மாநகராட்சி
நமக்கு நாமே திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.;
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நமக்கு நாமே திட்டம் மூலம் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலை புனரமைத்தல், பூங்கா மற்றும் விளையாட்டு திடல் மேம்பாடு செய்தல், தெருவிளக்கு, நீரூற்றுகள் மற்றும் போக்குவரத்து ரவுண்டானாக்கள் அமைத்தல், மின் சிக்கன தெருவிளக்குகள், தேவையான இடங்களில் சூரியசக்தி உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மரம் நடுதல் மற்றும் மரங்களுக்கான பாதுகாப்பு வளையங்கள் அமைத்தல், நவீன நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்தல், அரசு கல்வி நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுற்றுச்சுவர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் புதிதாக கட்டுதல், பாலங்கள் சிறு பாலங்கள் மழைநீர் வடிகால் அமைத்தல் மண் சாலை, கப்பி சாலை ஆகியவற்றை தேவையின் அடிப்படையில் சிமெண்ட், தார் சாலையாக அமைத்தல்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் புதிதாக கட்டுதல். அங்கன்வாடி சமுதாய மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் , கடைகள், மார்க்கெட்டுகள் மேம்பாடு செய்தல் புதிய மயானம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ,குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் மேற்கண்ட பணிகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் விவரத்தை மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணி மாநகராட்சி மூலம் பரிசீலனை செய்து மதிப்பீடுகள் தயார் செய்து மதிப்பீட்டுத் தொகை விவரங்கள் தெரிவிக்கப்படும். மதிப்பீட்டு தொகையில் பொதுமக்களால் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பு செலுத்தப்பட்டால் இத்திட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெற்று மாநகராட்சியால் பணி மேற்கொள்ளப்படும். மதிப்பீட்டு தொகையில் 50 சதவீத தொகை பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்தப்பட்டால் பங்களிப்பு தாரர் மூலமாகவே பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையை Namakku Naame Thittam Account (urban) public Contribution Fund என்ற பெயரில் வரைவோலையாகவோ அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கி, ஈரோடு மெயின் கணக்கு எண்: 0165000101398484, IFSC Code: PUNB0016500, Branch Code: 016500 -லும் வங்கி பண மாற்றம் முறையில் செலுத்தலாம். பங்களிப்பு செலுத்தப்பட்ட நாளிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தங்கள் பகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.