ஈரோட்டில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டி: 200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டியில் 200 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.;

Update: 2022-02-26 12:30 GMT

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  கட்டுரை போட்டி, "இடஒதுக்கீடு வழியில் சமூகநீதி" என்ற தலைப்பிலும், பேச்சு போட்டி, "பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மூலமாக தமிழ் உணர்வு", என்ற தலைப்பிலும் நடைபெற்றது.

ஆறாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை, கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என 3 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 200 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிகாட்டினார்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் புகழேந்தி, மோகன்ராஜ், உதவி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News