3 நாட்களில் 1,200 டன் கழிவுகள் அகற்றம் : ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்

ஈரோடு மாநகர் பகுதியில் 3 நாட்கள் நடந்த தூய்மை பணியில் 1,200 டன் கழிவுகள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்

Update: 2021-09-23 11:15 GMT

தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி.

தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 20 முதல் 25-ந் தேதி வரை தூய்மை வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் அதிகளவு மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த தூய்மை பணிகளை கடந்த 20ஆம் தேதி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் இந்த மெகா தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு மண்டலத்திற்கு 100 பணியாளர்கள் வீதம் 4 மண்டலத்திற்கு 400 பணியாளர்கள் இந்த தூய்மை பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஜே.சி.பி. எந்திரம் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 100 டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இதன்படி 4 மண்டலத்தில் நாளொன்றுக்கு 400 டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்தந்த மண்டலத்தில் நடைபெறும் பணிகளை அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:

அரசு அறிவிப்பு படி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை தூய்மை பணிகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு மாநகர் பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் 100 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நம் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மெகா கிளினிக் என்ற பெயரில் மாநகர் பகுதியில் 60 வார்டுகளிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் சாக்கடைகள் அடைப்புகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 60 வார்டுகளில் 26 வார்டுகளில் தூய்மை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் அரசு அறிவித்த தூய்மை பணிகள் வாரம் நமக்கு மிகவும் எளிதாக அமைந்து விட்டது. கடந்த 20ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதாவது கடந்த 3 நாட்கள் நடைபெற்ற தூய்மை பணிகள் மூலம் மாநகர் பகுதியில் 1200 டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. வரும் 25-ஆம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News