வேட்புமனு தாக்கலின்போது செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு: செய்தியாளர்கள் சாலை மறியல்

ஈரோட்டில் வேட்புமனு தாக்கலின்போது செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-03 16:45 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட செய்தியாளர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை அந்தப்பகுதிகளில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி மண்டலம் 4ல், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அப்போது, வேட்புமனு பெறும் அதிகாரி ஜெகநாதன் செய்தி எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தார். மேலும், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உத்தரவிட்டதாக கூறி அனுமதி மறுத்தால், செய்தி சேகரிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி ஈரோடு - பழனி சாலையில் செய்தியாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதையடுத்து, வேட்புமனு பெறும் அதிகாரி ஜெகநாதன் சாலை மறியலில் ஈடுபட்ட செய்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, செய்தி சேகரிக்க அனுமதி வழங்கியதை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டனர். செய்தியாளர்களின் சாலை மறியலால் ஈரோடு - பழனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News