ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சுப்பராயன் எம்பி., தலைமையில் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சுப்பராயன் எம்பி., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதாரம் குடிநீர் வழங்கும் பணிகளை தனியாரிடம் வழங்க கூடாது. தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தைக் குறைக்க கூடாது. உள்ளாட்சி தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவை சுமத்த கூடாது. நிர்வாக இயக்குனரின் 2.10.2021 தேதி உத்தரவை திரும்பப் பெற வேண்டும். சுய உதவிக்குழு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி ஈரோடு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சக்திவேல், ஜெகநாதன், குணசேகரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பும் ஏஐடியுசி சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.