ஈரோடு மாவட்டத்தில் இன்று 538 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 538 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.;
ஈரோடு மாவட்டத்தில் இன்று 538 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் சிறப்பு முகாம் துவங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை கூட்டும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இது வரை 6 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்திலும் 6 கட்ட தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றும், நாளை (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. குறிப்பாக இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் 60 வார்டிலும் ஒவ்வொரு தடுப்பூசி மையம் என 60 தடுப்பூசி முகாம், 4 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம், இதுபோக 40 நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி முகாம் போடப்பட்டு வருகிறது. ஈரோடு பஸ் நிலையம், ஆர் .கே. வி .ரோடு உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். நேற்று ஈரோடு மாநகரின் 47- வது வார்டில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விவரம் சேகரிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்று மாணவர்கள் விவரம் சேகரித்தனர். இதில் 47-வது வார்ட்டில் 400 பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்துள்ளனர். இவர்கள் குறித்து விவரம் மாநகராட்சியில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை அந்தப் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடாத 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இனிவரும் நாட்களில் கல்லூரி மாணவர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்கள் விவரம் சேகரித்து அவர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதன் மூலம் விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பட்டியலில் நமது மாவட்டமும் இணைந்துவிடும் என்றார்.இன்று மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெறும். இதைத்தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) 2 -வது நாளாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும். நாளை மாவட்டம் முழுவதும் 551 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்ட கொள்ளுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.