ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கட்டாயம் திருமணம் செய்து வைத்த 2 பெண்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-01-18 10:00 GMT

பைல் படம்.

ஈரோடு கருங்கல்பாளையம், வைராபாளையம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (28). டெய்லர். வாய் பேச முடியாத, காது கோளாதவர். மாரிமுத்துக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் பணம், நகை ஆசை காட்டி திருமணத்துக்கு சம்மதம் செய்ய வைத்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கட்டாயத்தின் பேரில் 16 வயது சிறுமிக்கும், மாரிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஆக., மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அப்போது, சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்த சம்பவம் தெரியவந்தது. உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர், இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலகினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடியாக விசாரணை நடத்தி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும், குழந்தை திருமணத்திற்கு உறுதுணையாக இருந்ததாக மாரிமுத்துவின் அப்பா ராதாகிருஷ்ணன், அம்மா கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில், கலைவாணி மற்றும் சிறுமியின் அம்மா கோவை மத்திய சிறையிலும், மாரிமுத்து, அவரது அப்பா ராதாகிருஷ்ணன், சிறுமியின் அப்பா ஆகியோர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News