வங்கியில் போலி காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது

வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ .6½ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-26 10:45 GMT
வங்கியில் போலி காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
கைது செய்யப்பட்ட ஈஸ்வரமூர்த்தி.
  • whatsapp icon

ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 46). தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம்  தேதி சதீஷ் அந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். அங்கு வங்கி ஊழியரிடம் அவர் ஒரு காசோலையை கொடுத்து அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள பணத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைக்கும்படி கூறி உள்ளார்.

அந்த காசோலையை வாங்கி வங்கி ஊழியர் சரிபார்த்தார். அப்போது அதில் ரூ.6 கோடியே 60 லட்சம் என்று குறிப்பிடப்பட்டி இருந்தது. அதிக தொகை என்பதால் சதீஷின் வங்கி கணக்கில் வரவு செலவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் வரவு, செலவு இருந்தது தெரியவந்தது. இதனால் வங்கி அதிகாரிகளுக்கு சதீஷின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சதீஸ் என்ற பெயரில் இதுவரை காசோலை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அந்த காசோலைக்கும், தங்களது நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வங்கியின் உதவி மேலாளர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி காசோலை கொடுத்து வங்கியில் சதீஷ் பண மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சதீஷை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் .விசாரணையில் இந்த காசோலையை ஆணைக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் என்னிடம் கொடுத்து மாற்ற சொன்னார் என்று கூறினார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்பாக ஈஸ்வரமூர்த்தியிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் இந்த போலி காசோலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News