4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
ஈரோடில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பெரியவலசு நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (38). சீட் கவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நான்சி. இவர்ளுக்கு திமூன் அந்தோணி ( 4) என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்களுடைய வீட்டின் முன்பு 8 அடி ஆழம் உள்ள தரைதள தண்ணீர் தொட்டி உள்ளது.
இந்த நிலையில் அருகில் இருந்த யாரோ காவிரி தண்ணீர் வருகிறதா? என்று தண்ணீர் தொட்டி மூடியை திறந்து பார்த்துள்ளனர். பின்னர் மூடியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். அப்போது வீட்டின் வாசல் பகுதியில் நின்று விளையாட்டு கொண்டு இருந்த அந்தோணி மதியம் 2 மணி அளவில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து தாமஸ் வீட்டுக்கு வந்துள்ளார், அப்போது மகனை காணவில்லை, அக்கம் பக்கம் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தொட்டியை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது தண்ணீரில் மூழ்கியபடி குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.