டாஸ்மாக் மதுக்கடையில் 10 மணி நேரம் அதிரடி சோதனை

டாஸ்மாக் கடையில் 10 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தியதில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் குறித்த டைரி சிக்கியது.

Update: 2021-10-30 11:15 GMT

பைல் படம். 

ஈரோடு அடுத்துள்ள திண்டலில் இருந்து வில்லரசம்பட்டி செல்லும் சாலையில் மாருதி நகரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் உயர் ரக மது வகைகள் விற்பனை செய்யும் எலைட் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையில் 5 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் மீது தொடர்ந்து அதிக அளவு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் அந்த டாஸ்மாக் கடையில் கோவை மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் சேனாபதி, ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். போலீசார் சோதனைக்காக உள்ளே வந்ததும் விற்பனை நிறுத்தப்பட்டது. குடிமகன்கள் வெளியே அனுப்பப்பட்டனர். போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கடையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் மதுபான வகைகள் இருந்தது தெரியவந்தது. காலையிலிருந்து எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை ஆனது என்ற விவரங்களை சேகரித்தனர்.

அப்போது கூடுதலாக ரூ .15,000 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கூடுதல் விலைக்கு சரக்குகள் விற்ற வகையில் ரூ.15 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு டைரி சிக்கியது. அதில் தினமும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கு  நடந்த சோதனை அதிகாலை 5 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட பத்து மணி நேரம் சோதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சோதனை நிறைவடைந்தது.

இதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்த தகவல்களை மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மூன்று ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News