தேர்தல் பிரசாரம் சரியில்லை..! ஈரோடு அதிமுகவினர் புலம்பல் : எடப்பாடி அதிர்ச்சி..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கட்சித் தொண்டர்கள் புலம்பி வருவதாக தெரிகிறது.
திணறும் அதிமுக
கே.எஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தும் கூட ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் பணிகளை கவனிக்க முடியாமல் திணறுகிறார்கள் அதிமுகவினர். தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. .
செங்கோட்டையன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜி அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.
மாஜிக்கள் குழு இந்த பட்டியலை கண்டு ஆளும் கட்சியே கூட பிரமித்துப் போனது. அதிமுக அடித்து ஆடப் போகிறது. அதிமுக இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றே பலரும் கருதினார்கள்.
முக்கியமாக இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது. தேர்தலில் வெல்லும் பட்சத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கான ஒற்றை தலைமை ரூட் கிளியர் ஆகும். இதனால் அதிமுக இங்கே தீவிரமாக வேலை செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள கொங்கு மண்டல மாஜிக்கள் தவிர மற்ற மாஜிக்களும் சரி, எம்.எல்.ஏ.க்களும் சரி... தேர்தல் பிரச்சார பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவே இல்லை. தேர்தல் பணிகள் கடந்த 3 நாட்களாக வெளிமாவட்டத்தை சேர்ந்த அதிமுக வி.ஐ.பி.நிர்வாகிகள் யாரும் தொகுதியில் இல்லை.
இதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நொந்து போயிருக்கிறார்கள். தேர்தல் செலவினங்களுக்காக தினசரி ஒரு தொகை கொடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லையாம். அதேபோல, தங்குவதற்கான வசதியும் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. தேர்தல் செலவுகளை கவனிக்க முடியாமல் நிர்வாகிகள் சிலர் திணறி வருகிறார்களாம்.
இதனால், ஏற்பட்ட அதிருப்திகளால் வெளிமாவட்ட நிர்வாகிகள், தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பிப் போய்விட்டனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்கிறார்கள், ஈரோடு மாவட்ட ர.ர.க்கள். இது குறித்து எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிமாவட்ட அதிமுகவினரை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு "மணியானவர்களிடம்" கொடுக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால் அவர்களோ இதில் சரிவர அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், அவர்களிடம் எடப்பாடி கடிந்து கொண்டிருக்கிறார். தேர்தல் பணியில் மூன்று சுற்று பிரசாரத்தை திமுக கூட்டணி கட்சிகள் முடித்துள்ள நிலையில், அதிமுகவில் இன்னும் முதல் சுற்று பிரசாரத்தையே முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடியார் இறங்கினால்தான் சரியாகும் என்கிறார்கள் ர.ர.ங்கள்.