அந்தியூர் அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்
அந்தியூர் அருகே நெல் வயலில் நெற்பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள தோணிமடுவு, வட்டக்காடு, வரட்டுப்பள்ளம்அணை, காக்காயனூர் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 5-ம் தேதி வட்டக்காடு பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரது தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை சாப்பிட்டும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதேபோல், கிழங்குகுளி அருகே உள்ள சூரி தோட்டத்தில் புகுந்த யானை, அங்கு பயிரிட்டு இருந்த கரும்பு பயிர்களை நாசம் செய்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தோணிமடுவு பகுதியில் சோமசுந்தரம் என்பவரது தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, நெற்பயிர்களை சாப்பிட்டும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனை கண்ட விவசாயிகள் யானையை சத்தமிட்டு விரட்டினர். மேலும், அருகே இருந்த கரும்பு பயிர்களையும் சேதப்படுத்தியது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- இந்த ஒற்றை யானையின் தொந்தரவு வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.