அந்தியூரில் விவசாயிகளுக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை பயிற்சி முகாம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் விவசாயிகளுக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை பயிற்சி நடைபெற்றது.;
முகாமில் பேசிய ஈரோடு வேளாண்மை அலுவலர் ஷயாம் சுந்தர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலுள்ள அரிமா சங்க கட்டிடத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், இன்று காலை விவசாயிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை பயிற்சி முகாம் நடைபெற்றது. பாசம் விவசாய உற்பத்தியாளர் சங்க தலைவர் பாசம் மூர்த்தி வரவேற்றார். ஈரோடு வேளாண்மை துணை இயக்குனர்கள் சண்முகசுந்தரம், சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு வேளாண்மை அலுவலர் ஷ்யாம் சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மின்னணு வேளாண் சந்தைப்படுத்துதல் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வது குறித்தும், கூடுதல் விலை பெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்த அவர், இடைத்தரகர்களை முற்றிலும் கட்டுப்படுத்த தேசிய மின்னணு வேளாண் சந்தைப்படுத்துதல் மிக அவசியம் என விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.