ஈரோட்டில் இணையவழி பட்டா மாறுதல், நத்தம் நில வரித் திட்ட ஆய்வுக் கூட்டம்
ஈரோட்டில் நில அளவைத் துறையின் சார்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நில வரித் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் நில அளவைத் துறையின் சார்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நில வரித் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், நில அளவைத் துறையின் சார்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நில வரித் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இணையவழி பட்டா மாறுதல் மனுக்கள் ஊரகம் மற்றும் நத்தம், புல எல்லை மனுக்கள், நீர் நிலை அளவீடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுடன் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இணையவழி பட்டா மாறுதல் மனுக்களில் தள்ளுபடி சதவீதத்தை குறைத்தல், நிலுவை இனங்களை குறைத்தல் மற்றும் பெரியசேமூர், ஈரோடு நகர நிலவரி திட்டம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், 30 நாட்கள் மற்றும் அதற்கு மேல் நிலுவையில் உள்ள தகுதியான மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.ரவி, உதவி இயக்குநர் (நில அளவை) வி.அரிதாஸ், மண்டல துணை வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் நகர நில வரித் திட்ட தனி வட்டாட்சியர்கள், நில அளவை கோட்ட பராமரிப்பு ஆய்வாளர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.