ஈரோட்டில் பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கி விடுவதால் பயணிகள் அவதி

ஒரு சில பேருந்துகள் ஈரோடு பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2023-08-30 11:13 GMT

ஈரோடு பேருந்து நிலையம் 

ஈரோட்டின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்து உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், கோவை, மேட்டூர், கரூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகிறது. அதே போல் மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், சென்னை, உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கும் தொலை தூர பேருந்துகளும் செல்கிறது.

இதே போல் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னிமலை மற்றும் பவானி, பெருந்துறை, குமாரபாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி உள்பட பல ஊர்களுக்கு நகர பேருந்துகளும் சென்று வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஈரோடு பேருந்து நிலையத்துக்கு அதிகளவில் பேருந்துகள் வருகிறது.

நகர பேருந்துகளை வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என பலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் அதிகளவில் நகர பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள்.

இதே போல் மற்ற பகுதிகளில் இருந்து பொது மக்கள் நகரப்பேருந்துகளில் பேருந்து நிலையம் வந்து அங்கு இருந்து வெளியூர்களுக்கு செல்கிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் நகரப்பேருந்துகளில் பேருந்து நிலையம் வந்து அங்கிருத்து மாறி செல்வது வழக்கம். இதையொட்டி. பெரும்பாலான நகர பேருந்துகள் பேருந்து நிலைத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.

இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரும் ஒரு சில நகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு செல்லாமல் வெளிப்பகுதிகளில் பயணிகளை இறக்கி விடுவதாக பொது மக்கள் புகார் கூறினர்.

பேருந்து நிலையத்துக்கு வரும் ஒரு சில நகரப் பேருந்துகள் நாச்சியப்பா வீதி நகராட்சி திருமண மண்டம் அருகே மற்றும் பேருந்து நிலைய வெளி பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் குழந்தைகளுடன் வெளியூருக்கு செல்லும் பெண்கள் தாங்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு பேருந்து நிலையம் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் பேருந்து நிலையம் வந்து அவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். அப்படி வரும் மாணவர்கள் புத்தக பைகளை தூக்கி கொண்டு செல்லவும் சிரமம் அடைகிறார்கள். அதே போல் பேருந்து நிலையத்துக்கள் அந்தந்த பேருந்து நிற்கும் இடங்களில் பேருந்துக்காக பலர் நிற்கும் நிலையில் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமல் செல்வதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து நிலைய பகுதிகளில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் ரோட்டை கடந்து செல்லும் பெண் பயணிகள் மற்றும் முதியவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வயதானவர்கள் பேருந்து நிலையத்துக்கு தட்டுதடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதே போல் இறக்கி விடும் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் நடந்து செல்வதால் விபத்து அபாயமும் உள்ளது.

எனவே அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி விட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News