அந்தியூர் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓடும் பேருந்தில் திடீரென ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.;

Update: 2025-05-08 02:00 GMT

அந்தியூர் அருகே ஓடும் பேருந்தில் திடீரென ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராப்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 48). இவர் நேற்று மாலை 5.30 மணி அளவில் வெள்ளித்திருப்பூரில் இருந்து பவானிக்கு அரசு தடம் எண் பி20 என்ற அரசு நகர பேருந்தை ஓட்டிச்சென்றார்.

பட்லூர் அருகே சென்றபோது ஓட்டுநர் மயில்சாமிக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் எதிரே குரும்பபாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.

பேருந்து தன்னை நோக்கி மோதுவதுபோல் வருவதை உணர்ந்த பழனிச்சாமி வண்டியை நிறுத்தி இறங்கி ஓடி உயிர் தப்பினார். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பேருந்து அதை இழுத்துக்கொண்டே ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது.

பேருந்து சுவற்றில் மோதி நின்றதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே பேருந்தில் இருந்த பயணிகள் மயில்சாமியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News